ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவைத் திரட்ட அக்கட்சியின் அமெரிக்கப் பிரிவு சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சைபர் பிரிவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இந்த இணைய தளத்தைத் தொடங்கியுள்ளனர்.
“வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க இணையம் மிகவும் எளிமையான வழியாக இருக்கும் என கருதினோம். அதைத் தொடர்ந்து ‘my.aamaadmiparty.org’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்.” என்று அக்கட்சியை சேர்ந்த ரவி சர்மா தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் அமெரிக்கப் பிரிவு செய்தித்
தொடர்பாளர் பிரான் குருப் கூறுகையில், “இத்தகைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தல் போக்கையே மாற்றியமைத்து விட முடியும். கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தும், அதை வெளிப்படுத்த முடியாதவர்களுக்கு இணையம் வழியான இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
தங்களின் கூகுள், யாஹு, பேஸ்புக் கணக்குகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் இணையத்தைத் தொடர்பு கொண்டு நன்கொடைகளை வழங்கலாம், தங்களின் நண்பர்களை இந்த இணையதளத்துக்கு அறிமுகப் படுத்தலாம்” என்றார்.