கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறார் என்று அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், நீதிபதிகள் பலர் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற பிறகும் உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதையடுத்து அவர் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீஸார் சென்றனர். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் ஒரு விண்ணப்பம் ஒன்று கொடுத்தார். அதில், நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறார். மேலும் அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த விண்ணப்பத்தை பதிவாளர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
எனினும், இதுதொடர்பாக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யலாம். நீதிபதிகள் கிடைக்கும் போது அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.