இந்தியா

பாதரசக் கழிவு பாதிப்பிலிருந்து கொடைக்கானலைக் காப்பாற்றுங்கள்: மத்திய அரசுக்கு கனிமொழி அழுத்தம்

ஆர்.ஷபிமுன்னா

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மெர்குரி எனப்படும் பாதரசக் கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் வலியுறுத்தி திமுகவின் அவைத்தலைவரான கனிமொழி பேசியுள்ளார்.

இது குறித்து கனிமொழி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் பேசியதாவது:

பாதரசத்தில் இருந்து தெர்மாமீட்டர் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தொழிற்சாலை கொடைக்கானலில் செயல்பட்டு வந்தது. கடந்த 2001-ம் ஆண்டு அது மூடப்பட்டது, இதற்குப் பிறகு தொழிற்சாலை நிர்வாகம், ஏறத்தாழ 20 டன் பாதரசக் கழிவுகளை முறையாக அகற்ற முடியவில்லை என்று ஒப்புக்கொண்டது. இந்த 20 டன் பாதரசக் கழிவில் சுமார் 1.3 டன் கழிவுகள் கொடைக்கானல் மலைக் காடுகளில் கொட்டப்பட்டன.

பாதரசம் கொடிய விஷத்தன்மை வாய்ந்தது. இந்தத் தொழிற்சாலை அமைந்த பகுதிகளில் நீண்டகாலமாகவே மக்கள் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கபப்ட்டு வருகிறார்கள். அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள் கூட கடுமையான நோய்களோடே பிறக்கின்றனர்.

பாதரசக் கழிவுகள் கொட்டப்பட்ட மலைக்காடுகளில் மழை பெய்யும்போது அந்தப் பாதரசக் கழிவுகள் மழை நீரோடு கலந்து ஓடிவந்து வைகை ஆற்றில் கலக்கின்றன.

இதனால் வைகை ஆற்றின் நீரைப் பயன்படுத்துபவர்களும் கடுமையான மாசுபாட்டுக்கும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ளனர்.

கொடைக்கானல் ஏரியும் பாதரசக் கழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கிலோ மண்ணில் 1 மில்லி கிராம் அளவுக்கு பாதரசக் கழிவு இருக்கலாம் என்பதே உலக அளவில் அனுமதிக்கப்பட்ட அளவீடு. கனடா நாட்டில் ஒரு கிலோ மண்ணில் 6.6 மில்லி கிராம் பாதரசக் கழிவு இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் கொடைக்கானல் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதரசக் கழிவுகளை ஆராய்ந்ததில் ஒரு கிலோ மண்ணில் 20 மில்லி கிராம் பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த அபாயத்தை மத்திய அரசு அனுமதிக்கிறதா? இது பாதுகாப்பானதா?

அளவுகடந்த பாதரசக் கழிவுகள் கொடைக்கானல் பகுதியின் சுற்றுப் புறச் சூழலையும், அப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இப்பகுதியின் எதிர்கால சந்ததியினருக்கும் கடும் பாதிப்பு பாதரசக் கழிவுகளால் ஏற்பட்டுள்ளது. பாதரசக் கழிவுகளை அகற்றுவதில் மத்திய அரசு முறையான எந்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஜனவரி 2016-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை வரையறுத்துள்ளது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் இருக்கும் பாதரசக் கழிவுகளை முழுமையாக அகற்றுவதற்கான முறையான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும்.

மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளின்படி, அபாயகரமான கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.

அதன்படி ஹிந்துஸ்தான் யுனி லீவர் ஆலை நிர்வாகத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத் தரவேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

SCROLL FOR NEXT