பைகுல்லா சிறையில் கலகத்தில் ஈடுபட்ட வழக்கில் சிக்கியுள்ள, ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, இந்திராணி முகர்ஜி தன்னை சிறையில் அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தினார்கள் என்று கூறுவதில் உண்மை இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.
சிறையில் மஞ்சு கோவிந்த் ஷெட்டி (45) என்ற பெண் கைதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிறையில் கலகம் மூண்டது, இது குறித்து தான் புகார் அளிக்க விரும்புவதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னைக் கண்மூடித்தனமாக அடித்ததாக சிபிஐ கோர்ட்டை நாடினார் இந்திராணி முகர்ஜி,
இதனையடுத்து இந்திராணி முகர்ஜிக்கு சிகிச்சை அளித்த ஜேஜே மருத்துவமனை மருத்துவர், “இந்திராணி உடலில் அடிபட்டதற்கான காயங்கள் தெரிகின்றன. தன்னை சிறை அதிகாரிகள் அடித்தது என்று அவர் கோருவது உண்மையே. கோர்ட் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதால், இந்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்” என்றார் அவர்.
தன் கை மற்றும் கால்களில் அடித்ததால் தன்னால் நடக்க முடியவில்லை என்று இந்திராணி முகர்ஜி புகார் தெரிவித்துள்ளார்.
ஷெட்டி மரண விவகாரத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தால் ஷெட்டிக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என்று சிறை அதிகாரிகள் தன்னை மிரட்டியதாகவும் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.