வியட்நாம் - இந்தியா இடையே 12 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு ரூ.3,350 கோடி கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
பிரதமராக பொறுப் பேற்ற பிறகு நரேந்திர மோடி, முதல் முறையாக நேற்று முன்தினம் தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் சென்றடைந்தார். தலைநகர் ஹனோயில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் குயென் ஜுவான் புக்கை நேற்று சந்தித்துப் பேசினார் மோடி. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையே, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, இரட்டை வரி தவிர்ப்பு உட்பட மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
வியட்நாம் பிரதமருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து பேசினோம். பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்த ரூ.3,350 கோடி கடன் தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியா, வியட்நாம் இடையே ராஜதந்திர ஒத்துழைப்பு என்ற நிலையில் உள்ள உறவை ஒருங்கிணைந்த ராஜதந்திர ஒத்துழைப்பு என்ற நிலைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு உறவில் புதிய பரிமாணமும் உத்வேகமும் கிடைக்கும்.
பிராந்திய அளவில் உருவெடுத்துள்ள சவால்களை முறியடிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்பதை இரதரப்பும் உணர்ந்துள்ளன. இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
மேலும் இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள் ளோம். இதன்மூலம் புதிய வர்த்தக மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாகும். இருதரப்பு வர்த்தகத்தை 2020-ல் ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை எட்ட இது உதவும்.
தங்கள் நாட்டு மக்கள் வளம்பெற வேண்டும், வேளாண்மையை நவீனப் படுத்த வேண்டும், தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும், அறிவியல், தொழில்நுட்பத்தை பலப்படுத்த வேண்டும் என வியட்நாம் விரும்புகிறது. இந்த முயற்சிக்கு உதவ இந்தியாவும், 125 கோடி இந்திய மக்களும் தயாராக உள்ள னர். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
பகோடா கோயிலில் மோடி
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பகோடா புத்த கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர் அங்குள்ள புத்த பிக்குகள் மத்தியில் அவர் பேசும்போது, “இரு நாடுகளுக்கிடையிலான உறவு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. புத்த மதம் இந்தியாவிலிருந்து இங்கு வந்ததும், இங்குள்ள இந்து கோயில்களும் இதற்கு சான்றாக விளங்குகின்றன” என்றார்.
முன்னதாக, அதிபர் மாளிகை வளாகத்துக்குள் உள்ள முன்னாள் அதிபர் ஹோ சி மின் வசித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்டில்ட் ஹவுஸையும் மோடி பார்வையிட்டார். அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அந்நாட்டு பிரதமர் புக் உடன் இருந்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் வியட்நாமுக்கு சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.