இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 4 அதிகாரிகள் உள்பட 5 பேர் பலியாயினர்.
இதுகுறித்து இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் டெல்லியில் கூறுகையில், "சி-130ஜே போக்குவரத்து விமானம் வழக்கமான பயிற்சி மேற்கொள்வதற்காக, ஆக்ரா விமானப்படை தளத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டது. இது எதிர்பாராதவிதமாக மத்தியப்பிரதேசம் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து 115 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 2 விங் கமாண்டர்கள், 2 ஸ்குவாட்ரன் அதிகாரிகள் மற்றும் விமானி ஆகிய 5 பேரும் பலியாகி விட்டதாக பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஆறு சி-130ஜே ரக சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து ரூ.6,000 கோடிக்கு இந்தியா வாங்கியது. 20 டன் சுமையை தாங்கிச் செல்லக்கூடியது இந்த வகை விமானம்.