இந்தியா

கன்னடத்தில் பேச வற்புறுத்தி மணிப்பூர் மாணவர்கள் மீது பெங்களூரில் தாக்குதல்

இரா.வினோத்

பெங்களூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்களை ஒரு கும்பல் கன்னடம் பேசச் சொல்லி வற்புறுத்தியது.

தங்களுக்கு கன்னடம் தெரியாது எனக் கூறிய மாணவர்கள் மீது அக்கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

வடகிழக்கு மாநிலமான ம‌ணிப்பூரைச் சேர்ந்தவர் டி.மைக்கேல் லாம்ஜதாங் ஹோகிப் (26). இவர் அங்குள்ள தடொ என்ற பழங்குடியின மாணவர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

மைக்கேல் தனது நண்பர்கள் கம்கோலன் (28), ராக்கி கிப்கேன் (25) ஆகியோருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் உள்ள கொத்தனூ ருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள‌ சாலையோர உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

கொலைவெறித் தாக்குதல்

அப்போது குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மைக்கேலிடம் கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர் தனக்கு கன்னடம் தெரியாது என இந்தியில் பதிலளித்துள்ளார். ‘கன்னடம் தெரியாமல் எதற்காக கர்நாடகத்தில் இருக்கிறாய்? சீனாவுக்கு போக வேண்டியது தானே?' என கோபமாக கேட்டுள்ளனர். 'நாங்கள் மணிப்பூரைச் சேர்ந்த‌வர்கள்' எனக் கூறிவிட்டு மைக்கேல் மற்றும் அவரின் நண்பர்கள் அங்கிருந்து வெளியேறினர். இருப்பினும் அவர்களை துரத்திச் சென்ற கும்பல், “உங்களுக்கு கன்னடம் தெரியாது. ஆனால் கன்னட மக்கள் தயாரித்த உணவை மட்டும் சாப்பிட தெரியுமா? போய் சீனாவிலே சாப்பிடுங்கள்” எனக் கூறி சரமாரியாக கற்களாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளனர். பலத்த ரத்தக் காயங்களுடன் மைக்கேல் ஓடியபோதும், இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

இதற்கிடையே மைக்கேலின் நண்பர்களில் ஒருவர் அருகில் இருந்த கொத்தனூர் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துள்ளார். போலீஸாரை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

பணம் கொள்ளை

படுகாயமடைந்த மைக்கேலை மீட்ட போலீஸார், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயமடைந்த கம்கோலன், ராக்கி கிப்கேன் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மைக்கேல் அளித்த‌ புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

மைக்கேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உரிய நேரத்தில் போலீஸார் வராமல் இருந்திருந்தால், எங்களை அந்த கும்பல் அடித்தே கொன்றிருக்கும். உயிரோடு இருந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

நாங்கள் வைத்திருந்த பணம், வங்கி டெபிட் கார்டு, வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அந்த கும்பல் பறித்துச் சென்றுவிட்டது” என்றார்.

SCROLL FOR NEXT