காங்கிரஸ் விஷ விதையை விதைக் கிறது. தெலங்கானா விவகாரத்தை அக்கட்சி கையாண்டு வரும் விதத் திலிருந்தே இதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
இமாசலப் பிரதேசத்தின் சுஜான் பூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மோடி பேசியதாவது: “வாக்கு வங்கி அரசியலை தொடங்கியது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், இப் போது அதை நாங்கள் செய்வ தாக அக்கட்சி புகார் கூறுகிறது. காங்கிரஸ் கட்சிதான் விஷ விதையை விதைக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது நடை பெற்று வரும் சம்பவங்களை கூறலாம்.
நாங்கள் விஷ விதையை விதைக்கிறோம் என்றும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் வகை யில் அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி கூறுகிறார்.
ஆனால், வேற்றுமைகளை உருவாக்குவது யார்? சகோதரர் களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியது யார்? ஏழை, பணக்காரனிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது யார்?
மத்தியில் வாஜ்பாய் தலைமை யிலான பாஜக அரசு ஆட்சியி லிருந்தபோது, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங் களை பிரித்து புதிய மாநிலங்கள் சுமுகமாக உருவாக்கப்பட்டன. பாஜக அன்புமயமான அரசியலில் ஈடுபடுகிறது; வெறுப்பு அரசியலில் அல்ல.
காங்கிரஸ் கட்சி, வெறுப்பு, தீண்டாமை அரசியலில் ஈடுபடு கிறது. ஒருமுறை கேரளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் என்னை பாராட்டி பேசினார். உடனடியாக அவர் காங்கிரஸி லிருந்து நீக்கப்பட்டார். என்னை சந்தித்த கேரள அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற அரசியல் ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல.
காங்கிரஸ் ஒரு வாரிசு கட்சி. வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் எதிரி.
காங்கிரஸ், தான் ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசியை குறைப்பேன் என்றது. ஆனால், அதை அவர்களால் செய்ய முடியவில்லை.
காங்கிரஸின் 60 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி ஏதும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் 60 மாதங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
நாட்டின் ஊழல் பெருக முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஊழல் அற்றவர்களாக இருந்தால், எதற்காக கருப்புப் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் பயப்படுகிறார்கள். இவர்கள் ஏழைகளை கொள்ளையடித்து, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்த கருப்புப் பணம் மீட்கப்பட்டால், நாட்டில் முறையாக வரி செலுத்தி வரும் நடுத்தர மக்களுக்கு பயன் கிடைக்கும்.
நாட்டை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் காலம் மலையேறிவிட்டது. வளர்ச்சிக்கான அரசியலுக்காக பாஜக பாடுபடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்.டி.ஏ) தேசிய வளர்ச்சிக் கூட்டணி என்று அழைக்கும் அளவுக்கு எங்களின் செயல்பாடு இருக்கும்.
பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால், இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கோ, தனது வருமானத்தை பதினான்கு மடங்கு பெருக்கியுள்ளார். அந்த பணம் மரத்தில்தான் காய்த்தது என சொல்லாமல் சொல்லிவிட்டார்.
இமாசலப் பிரதேசம், ராணுவ வீரர்களையும், தியாகிகளையும் ஈன்றெடுத்த பூமி. பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களை வரவேற்கிறேன். பாஜக வில் இருப்பவர்கள் அனைவரும் உறுப்பினர்கள் அல்ல; உறவினர் கள்” என்றார் மோடி.
கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “இந்தியாவின் தலைமை பலவீன மாக இருப்பதால், சிறிய நாடுகள் கூட நம்மை துணிச்சலாக எதிர்க் கின்றன. மோடி பிரதமரானால் இந்த நிலைமை மாறும். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து, எல்லையில் நடைபெறும் அத்து மீறலை தடுக்க பாதுகாப்புப் படை யினருக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும்” என்றார்.