இந்தியா

நாடாளுமன்றத் துளிகள்: கருச்சிதைவை தடுக்க நடவடிக்கை - மத்திய சுகாதாரதுறை இணையமைச்சர் அறிவிப்பு

பிடிஐ

நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

கருச்சிதைவை தடுக்க நடவடிக்கை

மத்திய சுகாதாரதுறை இணையமைச்சர் பகன் சிங் குலஸ்தே: கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கவும், கருவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விரிவான சுகாதார கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, ஊட்டசத்து மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. முதல் 3 மாதங்களில் தான் கருச்சிதைவு ஆபத்து ஏற்படுகிறது. அதை தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தாய்மை அடைந்திருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தரமான கர்ப்பகால பராமரிப்புகளும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. கருவுக்கோ அல்லது கர்ப்பிணியின் உயிருக்கோ ஆபத்து இருக்கிறதா என்பதும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

18 லட்சம் பேர் பொய் கணக்கு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி: பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில் 18 லட்சம் பேரின் வருவாய், அவர்களது கணக்கு விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் உரிய பதில் அளித்துள்ளனர். விளக்கம் அளிக்காதவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வங்கி துறையை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் நவீன தொழில்நுட்பங்களிலும் முறைகேடுகள் செய்யும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு வங்கிகள் நிபுணர்களை நியமித்து தொழில்நுட்ப விதிமீறல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

நிலமில்லாத விவசாயிகளுக்கும் காப்பீடு

வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்: பயிர் காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் நிலமில்லாத விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியை மாநில அரசுகள் உரிய வகையில் செலவிடும் என நம்புகிறோம். விவசாயிகள் பலன்பெறும் வகையில் இந்த திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் அறிவிக்கை வெளியிட வேண்டும். வேளாண் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை பஞ்சாப் மற்றும் பிற மாநில அரசுகள் செலவிடவில்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பலன்கள் விவசாயிகளைச் சென்று சேரவில்லை.

பணப் புழக்கத்தில் பாதிப்பில்லை

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்ஹால்: நாடு முழுவதும் சீரான பணப் புழக்கம் நிலவுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரொக்கப் பணம் மற்றும் நாணயங்களுக்கு எந்தப் பற்றாக்குறையும் ஏற்படவில்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒரு சில பகுதிகளில் மட்டும் ரூபாய் நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டு வருகிறது.

16 லட்சம் விவிபாட் இயந்திரங்கள்

சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி: வரும் 2019 மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ரசீது வழங்கும் விவிபாட் இயந்திரங்களை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக 16 லட்சம் இயந்திரங்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

நில மசோதா குழுவுக்கு காலக்கெடு நீட்டிப்பு: சர்ச்சைக்குரிய நில மசோதாவை ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் 9-வது முறையாக நேற்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுக்குழுவின் தலைவர் கணேஷ் சிங் (பாஜக) கொண்டு வந்த தீர்மானம் பூஜ்ய நேரத்தில் நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இதைத் தொடர்ந்து மசோதாவை திரும்ப பெற்ற மத்திய அரசு, அதை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT