இந்தியா

இந்தியர்களின் வெளிநாட்டு வங்கி விவரங்களை வெளியிட முடியாது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், ‘வெளிநாடுகளுடன் இந்தியா இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுவே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாததற்கு காரணம்’ என்று கூறப் பட்டுள்ளது.

முன்னதாக வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு செயல்பட வேண்டும். கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை பாதுகாக்கவே மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது என்று ராம் ஜேத்மலானி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 28-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய அரசின் வரி, வருவாய் துறை உயரதிகாரிகள், விரைவில் ஸ்விட்சர்லாந்து சென்று அங்குள்ள வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இருப்பதாகவும், இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT