2-வது முறையாக ஆர்பிஐ கவர்னராக தொடர விருப்பம் இல்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்ததையடுத்து, தான் தேர்ந்தெடுக்கப்பட மாட்டோம் என்பதை ராஜன் உணர்ந்திருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
“ரகுராம் ராஜனின் முடிவு நல்லது. ராஜன் தொடர்ந்து அப்பதவியில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்பதற்காக நான் கூறிய காரணங்கள் அனைத்தும் முக்கியமானவையே.
ரகுராம் ராஜன் ஒரு அரசு ஊழியர். எனவே ஊழியர்களை நாம் வெகுஜன வாக்கு அடிப்படையில் நாம் தேர்ந்தெடுப்பதில்லை” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமருக்கு தொடர்ந்து ராஜனை நீக்கக் கோரி வலியுறுத்தி கடிதங்களை சுவாமி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ரகுராம் ராஜன் முழுதும் தன்னை இந்தியராக உணரவில்லை என்றும் அமெரிக்கக் குடியுரிமைக்காக கட்டாய பயணம் மேற்கொள்பவர் என்றும் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இந்திய பொருளாதாரத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தி விட்டார் என்றும் பல்வேறு விதத்தில் அவர் மீது தாக்குதல் தொடுத்தார் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் ஜேட்லி கருத்து:
ரகுராம் ராஜன் கல்விப்புலம் நோக்கிய தனது ஆர்வத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவரது நல்ல பணிகளை இந்த அரசு பாராட்ட கடமைப்பட்டுள்ளது. அவரது முடிவையும் மதிக்கிறோம்.
இவருக்கு அடுத்தபடியாக யார் கவர்னர் என்பதை விரைவில் அறிவிக்கிறோம்.
ப.சிதம்பரம் ஏமாற்றம்:
ரகுராம் ராஜன் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்று கூறியதற்கு ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார், கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
“அவரது முடிவு எனக்கு ஏமாற்றத்தை அளிப்பதோடு, அவரது இந்த முடிவு ஆழ்ந்த வருத்தத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் நான் ஆச்சரியமடையவில்லை
நான் ஏற்கெனவே முன்பு தெரிவித்தது போல் இந்த அரசு ரகுராம் ராஜன் போன்ற ஒருவருக்குத் தகுதியுடையதல்ல. எது எப்படியிருந்தாலும் இந்தியாவுக்குத்தான் இழப்பு” என்றார்.
ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போதுதான் ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.