இந்தியா

டெல்லியில் இறந்த குழந்தையை அடக்கம் செய்யும்போது உயிர் இருந்ததை கண்டுபிடித்த உறவினர்கள்

பிடிஐ

டெல்லியில் அரசு மருத்துவமனை இறந்துவிட்டதாக அறிவித்த குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் பதார்பூரைச் சேர்ந்தவர் ரோஹித். அவரின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் குழந்தை பிறந்தது. ஆனால் அங்கிருந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ''குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை, குழந்தை இறந்துவிட்டது'' என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடல்நிலை சரியாகாததால் குழந்தையின் தாய் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மொத்தக் குடும்பமும் குழந்தையை அடக்கம் செய்யக் கிளம்பியது. ஆனால் ரோஹித்தின் சகோதரி, குழந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த பையில் அசைவு இருப்பதை உணர்ந்தார். உடனே பையைத் திறந்த அவர்கள், குழந்தை சுவாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். அதன் கால்கள் அசைந்து கொண்டிருந்தன.

'ஒட்டுமொத்த கவனக்குறைவு'

உடனே குழந்தை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தந்தை ரோஹித், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ''எப்படி அவர்களால் இவ்வளவு தூரம் பொறுப்பில்லாமல் இருக்கமுடியும்? அவர்களின் கவனக்குறைவு தண்டிக்கப்பட வேண்டும்?'' என்றார் ரோஹித்.

இதுகுறித்துப் பேசிய சஃப்தார்ஜங் மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே.ராய், ''அந்தப் பெண் 22 வாரக் குழந்தையை முன்கூட்டியே பிரசவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என்றார்.

SCROLL FOR NEXT