காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவலை ராணுவம் முறியடித்தது. இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து ஊடுருவிய திவிரவாதிகளுக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்திய எல்லைப் பகுதியான நௌகாமில், பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இந்திய எல்லைகுள் தீவிரவாதிகள் ஊடுருவலை அறிந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகள் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் துப்பாக்கி சூட்டு தாக்கிதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படைவீர்ர்கள் இருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இந்திய எல்லையோரத்தில் இந்த வாரத்தில் நடந்த இரண்டாவது பெரிய பயங்கரவாத ஊடுருவல் இது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காஷ்மீரின் விடுதலையை வலியுறுத்தி, காஷ்மீர் பிரிவினை ஆதரவாளர்கள் நாளை காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.