இந்தியா

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து 3 கட்ட போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ்

பிடிஐ

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யைக் கண்டித்து இந்த மாதம் முழுவதும் 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறியதவாது:

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு ஏழை, நடுத்தர மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வேலைவாய்ப்பு குறைந்து, நாட்டின் பொருளா தார வளர்ச்சியும் பாதிக்கப்பட் டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் இதுதான்.

எனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தோல்வி குறித்து ஜனவரி மாத இறுதி வரை காங்கிரஸ் கட்சி சார்பில் 3 கட்ட போராட்டம் நடைபெறும். முதல்கட்ட போராட்டம் ஏற் கெனவே தொடங்கிவிட்டது. வரும் 2, 3-ம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளனர்.

3, 4-ம் தேதிகளில் மாநில அளவில் போராட்டங்கள் நடைபெறும். 6-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடைபெறும். 9-ம் தேதி மகளிர் காங்கிரஸார் கட்சியின் இதர பிரிவினருடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவர். முதல்கட்ட போராட்டம் 10-ம் தேதி முடிவடையும். மற்ற 2 கட்ட போராட்டங்களும் ஜனவரி மாதம் முழுவதும் நீடிக்கும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் புதிய கள்ளச் சந்தைகள் பிறந்துள்ளன. ஒரு சந்தையில் பழைய ரூபாய் நோட்டுகள் 20 முதல் 30 சதவீத கமிஷனுக்கு புதிய நோட்டுகளாக மாற்றித் தரப்படு கின்றன. அரசு அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதை வருமான வரி அதிகாரிகளின் சோதனை மூலம் அறிய முடிகிறது.

வங்கிகள், ஏடிஎம்களில் அன்றாட செலவுக்கே பணம் கிடைக்காமல் சாதாரண மக்கள் கஷ்டப்படும் நிலையில், மற்றொரு கள்ளச் சந்தையில் புதிய ரூபாய் நோட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் வேண்டுகோள்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறும்போது, “பண மதிப்பு நீக்கம் காரணமாக, வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வறுமைக்கோட் டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும் பத்திலும் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் அரசு ரூ.25 ஆயிரம் வரவு வைக்க வேண்டும். பணம் எடுக்க கட்டுப்பாடு அமளில் இருந்த காலத்தில் வங்கிக் கணக்கில் உள்ள தொகைக்கு 18 சதவீதம் வட்டி வழங்க வேண்டும்” என்றார்.

மம்தா பானர்ஜி கேள்வி

மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறும்போது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்காக 50 நாள் அவகாசம் கேட்டார் பிரதமர் மோடி. அந்த கெடு முடிந்துவிட்டது. இந்த நிலையிலும் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க இன்னமும் கட்டுப்பாடு நீடிப்பது ஏன்? மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுக்கும் உரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம். மக்களின் பொருளாதார உரிமையை அரசு பறிக்கக் கூடாது” என்றார்.

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற் காக தினசரி உச்சவரம்பு ரூ.2,500-ல் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப் பட்டுள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT