காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கிக்கு பாதிக்கப்பட்டவர்களின் நிலையை வெளியுலகிற்கு உணர்த்த உணர்வுபூர்வப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்கள்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் புர்கான் வானி கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பெல்லட் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். இதன் விளைவாக ஆர்பாட்டக்காரர்கள் பலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு பார்வை பறிபோகும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உலகிற்கு தெரியப்படுத்த விரும்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பெல்லட் துப்பாக்கியால் இந்திய பிரபலங்களான, சோனியா காந்தி, நரேந்திர மோடி, ஐஸ்வர்ய ராய், ஷாருக்கான், விராத் கோலி, அமிதாப் பச்சன் மற்றும் ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஆகியோர் பாதிக்கப்பட்டால் அவர்களின் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்பதை மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களின் மூலம் உணர்த்த எண்ணியுள்ளார்.
இப்புகைபடங்கள் உருவாக்கத்தின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் கலைஞர்களான முகமது ஜிப்ரான் நசிர், படுல் அகீல் போன்றோர் உள்ளனர்.
மார்ஃபிங் செய்யப்பட்ட புகைபடங்களில் காஷ்மீரில் தாக்குதலில் காயமடைந்த போராட்டக்காரர்களை போன்றே கண் மற்றும் முகத்தில் காயத்துடன் இந்திய பிரபலங்கள் உள்ளனர். மேலும் அப்புகைப்படங்களில் பெல்லட் துப்பாக்கிக்கு பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் கருத்துகளும் இடப்பெறுவது போல் உருவாக்கியுள்ளனர்.
புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர் பாகிஸ்தானிய கலைஞர்கள்.
இதுகுறித்து ஜிப்ரான் நசிர் கூறும்போது, “காஷ்மீரில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள் குறித்து இப்பிரபலங்கள் பேச வேண்டும். அதற்கான அழுத்தமே இந்த மார்ஃபிங் புகைப்படங்கள்“ என்றார்.
தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உணர்வுபூர்வப் பிரச்சாரமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.