மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்கட் வனப்பகுதியில் இளம் பெண் ஷீனா போரா (24) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தாயார் இந்திராணி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோருக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகை ஏற்கெனவே சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் நீதிமன்றம் முக்கிய குற்றவாளிகளான இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டை பதிவு செய்தது. இது தவிர கடத்திச் சென்று படுகொலை செய்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர்களுக்கு எதிராக பதிவு செய்தது.
மேலும் ஷீனாவின் இளைய சகோதரர் மெக்ஹெயிலையும் கொல்வற்காக கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக இந்திராணி முகர்ஜி மற்றும் கண்ணா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் 3 குற்றவாளிகளுக்கும் விளக்கப்பட்டது. அப்போது குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதி ஹெச்.எஸ் மகாஜன் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் வனப்பகுதியில் ஷீனா போராவின் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 2012 ஏப்ரல் 24-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.