இந்தியா

பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பவர்கள் கறுப்புப் பண விசுவாசிகள்: 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கானது - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இரா.வினோத்

ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவே மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை விமர்சிப் பவர்கள் க‌றுப்புப் பணத்தின் ராஜ விசுவாசிகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை, கர்நாடக அரசின் சார்பாக 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நேற்று தொடங்கிய‌து. இந்திய வம்சாவளியை சேர்ந்த போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அந்தோனியோ கோஸ்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரினாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஸ்வின் அதின் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் நரேந்திர‌ மோடி பேசியதாவது: இந்திய வம்சாவளி யினர் மூலம் ஆண்டுதோறும் 69 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம் இந்தியாவுக்கு வருகிறது. இது இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு, தொழில்நுட்ப வளர்ச் சிக்கு பெரிதும் உதவுகிறது.

அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கும் நம் மக்களைக் கொண்டு இந்தியாவை முன்னேற்ற வேண்டும். தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நமது தூதரகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் பெறவும், தொழில் தொடங்குவதற்கும் இந்தியா பெரி தும் உதவுகிறது. வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு திறன் மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுடன் எளிதாக இணைந்து பணியாற்றும் வகையில் அந்நிய நேரடி முதலீடு திட்டத்தில் நிறைய விதிகள் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளன.

இதன்படி 15 ஆண்டுகள் கால வரையறை உள்ள ‘இந்திய வம்சா வளி குடிமகன் அட்டை' வைத்துள்ள வர்களுக்கு, ‘வெளிநாடு வாழ் இந்தியர்' என்ற நிரந்தர அட்டை வழங்கப்படும். எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் ‘வெளி நாடு வாழ் இந்தியர்' என்ற நிரந்தர அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் விசா இல்லாமல் இந்தியாவுக்கு எளிதாக வந்து செல்லாம்.

நாட்டை சீரழிக்கும் ஊழலை யும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டேன். இதனை விமர்சிப்பவர்கள் கறுப்புப் பணத்தின் ராஜ விசுவாசிகள். நாம் கனவு காணும் வலிமையான‌ நாட்டை கட்டமைக்க உறுதியான முடிவுகள் தேவை. அதற்காக துணிச்சலான முடிவை தொடர்ந்து எடுப்பேன். 21-ம் நூற்றாண்டு, இந்தியாவின் வளர்ச்சிக்கான நூற் றாண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர்கள் குவிந்தனர்

பெங்களூருவில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் 72 நாடுகளில் வாழும் 7,200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரியூனியன், பிஜி, மொரிஷியஸ், பிரான்ஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 2 ஆயிரத்துக்கும் அதிக மானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மலேசியாவில் இருந்து அமைச்சர்கள் டத்தோ சுப்ரமணியம், டத்தோ சரவணன், முன்னாள் அமைச்சர் டத்தோ சாமி வேலு, இலங்கையில் இருந்து முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ், பிரான்ஸில் இருந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் விஜய், வரலாற்று ஆய்வாளர் ராமசாமி நடராசன் உள்ளிட்ட பல தமிழ் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT