இந்தியா

நட்சத்திர தம்பதியர் பிரச்சாரம்: களை கட்டும் கர்நாடக தேர்தல் களம்

இரா.வினோத்

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தனது கணவரின் வெற்றிக்காக மனைவியும், மனைவியின் வெற்றிக்காக கணவரும் இரவு பகலாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் அனந்த்குமார் போட்டியிடுகிறார். அவரது மனைவி தேஜஸ்வினி கணவரின் வெற்றிக்காக‌ மிக தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறார். பெங்களூரில் க‌டந்த 25 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அவர், தனது தோழிகளுடன் வீடுவீடாகச் சென்று பெண்களைச் சந்தித்து வாக்குசேகரிக்கிறார்.

நந்தன் நிலகேனி தம்பதி

இதே தொகுதியில் அனந்த் குமாரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஆதார் அட்டை திட்டத்தின் முன்னாள் இயக்குநர் நந்தன் நிலகேனியின் மனைவி ரோஹினியும் களத்தில் குதித்திருக்கிறார்.

பெங்களூரை உலகத் தரத்தில் உயர்த்தவும் இன்போசிஸ் போன்ற பல நிறுவனங்களை நாடு முழுக்க கொண்டுவரவும் தனது கணவர் நிலகேனிக்கு வாக்களிக்க வேண்டும் என அவருடைய மனைவி ரோஹினி தீவிர‌ பிரச் சாரம் செய்து வருகிறார். ரோஹி னிக்கு சமீபத்தில் கை முறிந்திருந்த போதும் கட்டு போட்டுக்கொண்டு தனது கணவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

நடிகர் சிவராஜ்குமார்

ஷிமோகா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார். கீதாவுக்கு ஆதரவாக‌ அவரது கணவர் சிவராஜ்குமார் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

பெங்களூர் தெற்கு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாக போட்டியிடும் தமிழரான ரூத் மனோரமாவிற்கு ஆதரவாக அவருடைய கணவர் என்.பி.சாமி முழு வீச்சில் செயல் பட்டு வருகிறார். கட்சி தொண்டர் களுடனும் தன்னுடைய கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுட னும் பல்வேறு வியூகங்களை வகுத்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சதானந்த கவுடா

பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிற்கு ஆதரவாக அவரது மனைவி டாட்டி கவுடா பிரச்சாரம் செய்து வருகிறார். பெண்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பூங்கா ஆகிய இடங்களை தேர்வு செய்து டாட்டி தனது கணவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

மனைவிக்காக குமாரசாமி

இதேபோல சிக்கபளாப்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியை எதிர்த்து களமிறங்கியுள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். அனிதா குமாரசாமிக்கு அரசி யலுக்கு புதிதில்லை என்பதால் மக்களிடையே இரண்டற கலந்து பிரசாரம் செய்துவருகிறார்.

மாமனார், மாமியாருக்காக

ஹாசன் தொகுதியில் போட்டி யிடும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு ஆதரவாக அவருடைய மருமகள் பவானி ரேவண்ணா தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளார். ஹாசன் தொகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று தேவகவுடாவுக்கு ஆதர வாக பவானி மேற்கொள்ளும் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதேபோல பெங்களூர் மத்திய தொகுதியில் தேவகவுடா கட்சி சார்பாக போட்டியிடும் தனது மாமியார் நந்தினி ஆல்வாவை ஆதரித்து நடிகர் விவேக் ஓபராய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். விவேக் ஓபராய், வட இந்தியாவில் பா.ஜ.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT