பெண் பொறியாளரை வேவு பார்த்த விவகாரத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த 30 குழுக்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனதா தளம் ஆகியவை சார்பில் 45 பேர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் ஷோபா ஓஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, குடியரசுத் தலைவர் நேரில் மனுவை பெற்றுக் கொண்டார். இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா கூறிய போது, இது பாஜகவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. பெண்கள் உரிமை தொடர்பான இந்த விவகாரத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று பட்டு நீதி கோர வேண்டும் என்றார்.
இன்று குஜராத்தில் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாளை நாட்டின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் வேறொரு பெண்ணுக்கு இதேபோன்ற கொடுமை நேரிடலாம். அதை தடுக்க வேண்டியது நமது கடமை என்று அவர் மேலும் கூறினார்.
45 பேர் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருந்த ஷப்னம் ஹஸ்மி, சயிதா ஹமீது உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது:
கோப்ராபோஸ்ட், குலைல் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. ஒரு இளம்பெண்ணை வேவு பார்ப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர் மட்டுமல்ல, அவரது நண்பர்களும்கூட வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் மெளனம் காக்கின்றனர். அரசு இயந்திரம் முழுவதும் ஒரு பெண்ணை வேவு பார்க்க திருப்பி விடப்பட்டுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதம். இதுதொடர்பாக நியாயமான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட பெங்களூர் பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் அரசு உத்தரவின்பேரில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கண்காணிப்பில் இந்த வேவு பார்க்கும் பணி நடைபெற்றதாக கோப்ராபோஸ்ட் இணையதள ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டது.