இந்தியா

உறுப்பினர்கள் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

செய்திப்பிரிவு

தமிழக மீனவர் பிரச்சினை, தெலங்கானா பிரச்சினை ஆகியவற்றை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முக்கிய அலுவல்கள் ஏதும் முடிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை மக்களவை கூடியவுடன், ஒன்றுபட்ட ஆந்திரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி குவிந்தனர். இதே போல், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவையை முதலில் பகல் 12 மணி வரைக்கு ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். மீண்டும் அவை 12 மணிக்கு கூடிய போதும் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 2-வது நாளாக மக்களவை, உறுப்பினர்கள் அமளியால் முடங்கியுள்ளது.

மாநிலங்களவையிலும், தெலங்கானா, தமிழக மீனவர்கள், அருணாச்சல் மாணவர் மீது தாக்குதல் போன்ற பிரச்சினைகள் எழுந்தன.

ராஜ்யசபா கூடியவுடன், டெல்லியில் அருணாச்சல் மாணவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்து விவாதிக்க பாஜக அனுமதி கோரியது. பாஜக உறுப்பினர் ரவிசங்கர் பிராசத்துக்கு, அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி வழங்கினார். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அவை நடுவே சென்று, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை கோரி கோஷம் எழுப்பினர்.

தெலங்கானா பிரச்சினையை எழுப்பி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவை நடுவே குவிந்தனர்.

அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் ஹமீது அன்சாரி, மரணத்துக்கு கூட அவையில் மரியாதை கிடையாதா? என்றார்.

ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை முதலில் 12 மணி வரைக்கும், பின்னர் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பின்னர் அவை கூடிய போதும் உறுப்பினர்கள் அதே மனநிலையில் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் ஒத்திவைத்து துணைத் தலைவர் குரியன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT