இந்தியா

பெங்களூர் ஏடிஎம்மில் வீரத்துடன் போராடி கொள்ளையை தடுத்த காவலாளி!

இரா.வினோத்

பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் புகுந்த கொள்ளையர்களுடன் வீரதீரத்துடன் போராடி கொள் ளையை தடுத்த காவலாளி, கொள்ளையனையும் போலீஸா ரிடம் பிடித்துக் கொடுத்தார்.

படுகாயம் அடைந்தபோதும், தளராமல் போராடி பணத்தை பாதுகாத்த காவலாளியை காவல் துறையினரும் வங்கி அதிகாரி களும் பாராட்டினர்.

பெங்களூரில் கடந்த நவம்பர் 19-ம் தேதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற வங்கி பெண் ஊழியரை பட்டப்பகலில் கொடூரமாக‌ தாக்கிவிட்டு, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. தாக்கப்பட்ட பெண் குணமடைந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையனை பிடிக்க முடியாமல் பெங்களூர் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு காவலாளி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படாத 1300 ஏடிஎம் மையங்களை மூடும்படி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏடிஎம் மையம் ஒன்றில் கொள்ளை முயற்சி நடந்தது. ஆனால், அங்கிருந்த காவலாளி உயிரை துச்சமென மதித்து கடுமையாகப் போராடி பணத்தைப் பாதுகாத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணி அளவில், பெங்களூர் மடிவாளா பகுதியில் உள்ள‌ பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் ஹெல்மெட் அணிந்த 2 பேர் புகுந்தனர். அவர்கள் அந்த இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

அவர்களை அந்த மையத்தின் காவலாளி சஹாபுதீன் தடுத்தார். சஹாபுதீனை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக‌ தாக்கிய அந்த இருவரும், அவரின் கைகளை கட்டி ஏடிஎம் மையத்திற்கு வெளியே அமர வைத்து விட்டு, உள்ளே வரவிடாமல் கதவை மூடியுள்ளனர்.

படுகாயமடைந்த சஹாபுதீன் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு, தனது கைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்து எறிந்துவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தவர்களுடன் கடுமை யாக சண்டை யிட்டிருக்கிறார்.

கொள்ளையர்களுடன் அரை மணிநேரமாக போராடிய அவர், அவர்கள் கொண்டுவந்த ஆயுதத்தைக் கைப்பற்றி அவர் களை கடுமையாகத் தாக்கினார்.

அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதனிடையே அங்கிருந்து ஒரு கொள்ளையன் தப்பியோடிவிட்டான். மற்றொரு கொள்ளையன் காவலாளி கடுமை யாக தாக்கியதால் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தான்.

தகவல் அறிந்து, அங்கு வ‌ந்த போலீஸார் காயமடைந்த கொள்ளையன் ஜம்முவைச் சேர்ந்த சந்தீப்பை (30) கைது செய்தனர். காவலாளி சஹாபுதீனை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மடிவாளா போலீஸார், தப்பியோடிய மற்றொரு கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ. 4 லட்சத்தை கொள்ளை யர்களிடமிருந்து பாதுகாத்த காவலாளியை போலீஸாரும் வங்கி அதிகாரிகளும் பாராட்டினர்.

SCROLL FOR NEXT