காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக் களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்திடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஹரீஷ் ராவத் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் வெளி யாயின. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கடந்த மே 24-ம் தேதி ஹரீஷ் ராவத் சிபிஐ முன் ஆஜராகியிருந்தார். அப்போது மீண்டும் ஜூன் 7-ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சில கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் அளிக்காததால்தான் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்ட தாக கூறப்படுகிறது.
ஆனால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக ராவத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நேற்று மீண்டும் சிபிஐ முன் ஆஜரான முதல்வர் ஹரீஷ் ராவத் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
முன்னதாக, அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என மறுத்த ராவத் பின்னர் ஒப்புக் கொண் டார். உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று ஹரீஷ் ராவத் மீண்டும் முதல்வரான தும், வழக்கை திரும்பப் பெற மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. ஆனால், சிபிஐ அக்கோரிக்கையை நிராகரித்து விட்டது.
சிபிஐ விசாரணைக்கு தடை கோரும் மனுவையும் உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.