இந்தியா

உத்தவ் தாக்கரேவுடன் அமித்ஷா சந்திப்பு

பிடிஐ

பாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் 'மடோஸ்ரீ' இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் தொடங்கி கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் நீடித்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வதற்கு முன் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் மகாராஷ்டிராவில் கட்சியை பலப்படுத்தவும் மூன்றுநாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா.

பாஜக மற்றும் மோடி அரசை தொடர்ந்து விமர்சித்துவரும் சிவசேனா சமீபத்தில் ஜனாதிபதி பதவிக்கு இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனை பரிந்துரைத்தது.

ஏற்கெனவே, நாட்டின் உயரிய பதவிக்கான தேர்தலில் தன்னிச்சையான போக்கை கடைபிடிக்கப்போவதாகவும் சிவசேனா கூறியிருந்தது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களான பிரதிபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு ஆதரவு கொடுத்தது.

இந்த சந்திப்புக்கு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, ''மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிவாரணம். கடன்களை தள்ளுபடி செய்ததால் ஏற்பட்ட சுமை என்பது அரசாங்கத்தை சார்ந்ததுதானே தவிர வங்கிகளை அல்ல. இடைக்கால தேர்தல் எங்கள்மீது திணிக்கப்படுமானால், நாங்கள் போராட தயாராக உள்ளோம்'' என்றார்.

2014-ல் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 288 இடங்கள் உள்ள நிலையில் பாஜக 122 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதிலும் ஒரு எம்எல்ஏ மரணமடைந்த நிலையில் சிவசேனா கூட்டணியோடு தற்போது ஆட்சியில் உள்ளது. அவ்வபோது முரண்பாடுகள் ஏற்பட்டுவரும் நிலையில் பாஜக - சிவசேனா உறவை தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ளவும் பாஜக முயன்று வருகிறது.

SCROLL FOR NEXT