இந்தியா

தெலங்கானா மசோதா: ஆந்திர சட்டசபையில் விவாதிக்க ஜன. 30 வரை அவகாசம்

செய்திப்பிரிவு

ஆந்திர சட்டசபையில் தெலங்கானா மசோதா குறித்து விவாதிக்க ஜனவரி 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு வாரங்கள் அவகாசம் கோரிய ஆந்திர அரசின் வேண்டுகோளைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒரு வாரம் மட்டும் அனுமதி அளித்துள்ளார்.

தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் “ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா” குறித்து அந்த மாநில சட்டசபையின் கருத்தறிய டிசம்பர் 12-ம் தேதி மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. அதன் மீது ஜனவரி 23-க்குள் விவாதம் நடத்தி மீண்டும் திருப்பி அனுப்பிவைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது சட்டசபையில் நடைபெறும் விவாதத்தில் இதுவரை 4000 திருத்தங்கள் வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அனைத்து உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்கும் வகையில் மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர், ஜனவரி 30 வரை 7 நாள்கள் மட்டும் கூடுதலாக அவகாசம் அளித்துள்ளார்.

ஜனவரி 30-க்குப் பின் சட்டசபையின் கருத்தை அறிந்தோ அல்லது அறியாமலேயோ மசோதா திருப்பி அனுப்பிவைக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டசபையின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே திட்டமிட்டபடி பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT