மும்பை: மும்பையில் உள்ள நெஸ்கோ மையத்தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.2,000 நுழைவுக் கட்டணம் செலுத்தி சுமார் 4,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட சிலர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது, இதனால் இரவு 12 மணியளவில், 3 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 24 வயது பெண்ணும் 28 வயது ஆணும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 25 வயது பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இதுகுறித்து மும்பை போலீஸார் கூறுகையில், “இறந்த மாணவர்களில் ஒருவர் நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் டாக்ஸிக்குள் ஒரு மாத்திரையும் நிகழ்ச்சியில் இரண்டாவது மாத்திரையும் உட்கொண்டுள்ளார். இது போதைப் பொருள் அதிகமாவதற்கு வழிவகுத்தது. அதிக போதைப்பொருளை உட்கொண்டதே மரணத்துக்கு காரணம் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு மாத்திரைகளை வழங்கிய மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 6-7 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன” என்றனர்.
மும்பைக்கு வெளியிலிருந்து இந்த மாத்திரைகள் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆகாஷ் சமல், நெஸ்கோ ஊழியர் சன்னி வினோத் ஜெயின், உள் பாதுகாப்பு குழு உறுப்பினர் பால கிருஷ்ணன் பலராம் மற்றும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெஸ்கோ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். உண்மைகள் விரைவில் கண்டறியப்படு வதை உறுதி செய்திட அனைத்து தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறோம்” என்று கூறிள்ளது.