கைது செய்யப்பட்ட அன்சாரி
மும்பை: இஸ்லாம் கொள்கையான கலிமா சொல்லாததால் மும்பையில் 2 பாதுகாவலர்களைக் கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையின் நயா நகர் பகுதியில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனைக்கு பின்னால் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில், ராஜ்குமார் மிஸ்ரா மற்றும் சுப்ரதோ சென் ஆகிய இரு வரும் பாதுகாவலர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அங்கு சென்ற ஜைப் ஜுபைர் அன்சாரி (31), அந்த இருவரின் மதம் பற்றி கேட்டுள்ளார்.
பின்னர் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான ‘கல்மா' அல்லது ‘கலிமா'-வைச் சொல்லுமாறு பாது காவலர்களை அன்சாரி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த இருவரையும் அன்சாரி கத்தியால் குத்திவிட்டு தப்பி உள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ராஜ்குமார் மிஸ்ரா தானாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நயாப் ஷேக் என்ற ஒரு நல்ல மனிதர், ரத்த வெள்ளத்தில் இருந்த சுப்ரதோ சென்-ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், 90 நிமிடங்களில் அன்சாரியை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை மட்டுமல்லாது மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை அடங்கிய குழுவும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இது ஒரு தனிப்பட்ட தாக்குதலா அல்லது பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியா என்பதைத் தீர்மானிக்க அன்சாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்து வருகின்றனர். அன்சாரி எழுதிய குறிப்புகளில் ‘ஐஎஸ்ஐஎஸ்', ‘லோன் வுல்ஃப்', ‘ஜிகாத்' மற்றும் ‘காசா' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.