பாட்னா: பிஹாரில் 2 பெண்களைக் கடத்தி, துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லாத்தேஹர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்களான இரண்டு பெண்கள், பிஹார் தலைநகர் பாட்னாவின் மிதாபூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நடனக் கலைஞர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், நவ்பத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ‘திலகம்' சடங்கு விழாவில் நடனமாடுவதற்காக, முன்னா குமார் என்பவரால் இந்த இரு பெண்களும் முறைப்படி அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்காகப் புறப்பட்ட பெண்களை, விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், சிலர் திட்டமிட்டு தனிமையான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, கடத்தப்பட்ட அந்த இரு பெண்களும் தனித்தனி இடங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். பின்னர், துப்பாக்கி முனையில் சுமார் 13 பேர் கொண்ட கும்பலால் அந்தப் பெண்கள் இரவு முழுவதும் அடுத்தடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அந்தப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மறுநாள் காலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அந்த வாகனம் புல்வாரி ஷெரீப் காவல் நிலையப் பகுதியை அடைந்தபோது, தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொல்ல நினைத்த பெண்கள், வாகனத்திற்குள் இருந்தபடியே கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு உஷாரான அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இது குறித்து புல்வாரி ஷெரீப் துணை கோட்ட போலீஸ் அதிகாரி தீபக் குமார் கூறுகையில், "பெண்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனே, முதற்கட்டமாக ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மேல் விசாரணைக்காக அது நவ்பத்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளில் முன்னா குமார், சூரஜ் குமார் மற்றும் பானு குமார் ஆகிய மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது" என்றார்.