கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் சமமானது என ட்விட்டரில் பதிவிட்டு டெல்லி மாணவி குர்மேகர் கவுருக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கார்கில் போரில் உயிர்நீத்த கேப்டன் மன்தீப் சிங்கின் மகள் குர்மேகர் கவுர். பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஏபிவிபிக்கு எதிராக குர்மேகர் கவுர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதனால் இவருக்கு இந்துத்துவா அமைப்பினர் பலாத்கார மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து குர்மேகர் கவுர், "உங்களின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். நான் தனி நபர் அல்ல; எனக்குப் பின் ஒட்டுமொத்த இந்திய மாணவர் சமூகமும் இருக்கிறது” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு நிற்கும் தனது புகைப்படத்தையும், தனது தந்தை கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் காரணமல்ல போர்தான் காரணம்" என்று சமூக இணையதளத்தில் பகிர்ந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து குர்மேகர் கவுரை கிண்டல் செய்து மீம்கள் வெளியிடப்பட்டன.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக், பாலிவுட் நடிகர் ரந்திப் உண்டா ஆகியோரும் குர்மேகர் கவுரை கிண்டல் செய்து தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் குர்மேகர் கவுருக்கு ஆதரவாகப் பதிவிடத் தொடங்கினர். இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக கவுதம் கம்பீர் இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் நமது ராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நாட்டிற்கான அவர்களது சேவை ஒப்பிட முடியாதது.
ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வு என்னை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நாம் வாழும் நாட்டில் அனைவருக்கும் அவர்களது கருத்துகளைக் கூறும் உரிமை உள்ளது. போரினால் தந்தையை இழந்த ஒரு மகள் அமைதியை விரும்பும் நோக்கத்துடன் போரின் கொடுமைகளைப் பற்றி பதிவிட அனைத்து உரிமையும் உண்டு. இதனை சில கும்பல்கள் தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும், அப்பெண்னை கேலி செய்யும் வாய்ப்பாகவும் பயன்படுத்த வேண்டாம். தங்களது கருத்தைக் கூற குடிமக்களுக்கு உரிமை உள்ளது போல அப்பெண்ணுக்கும் கருத்து கூற உரிமை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.