இந்தியா

தூய்மையான இந்தியா திட்டம் நாளை தொடக்கம்: விடுமுறை தினத்தில் அதிகாரிகள் பணிக்கு வர பிரதமர் உத்தரவு

ஏஎஃப்பி, பிடிஐ

தூய்மையான இந்தியா திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இதில் பங்கேற்க அதிகாரிகள் அனைவரும் தங்களின் அலுவலகங்களுக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தூய்மையான இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அனை வரும் தங்களின் அலுவல கங்களுக்கு வர வேண்டும். கழிவறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உத்தரவை பிரதமர் பிறப்பித்துள்ளார். இத்திட்டத்தில் இணைந்து செயலாற்ற பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டியவர் தேசத் தந்தை மகாத்மா காந்தி. அவரின் ஆசிரமத்தில் கழிவறையை தானே சுத்தம் செய்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருந்துள்ளார். எனவே, அவரின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தூய்மையான இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.

தூய்மையான இந்தியா திட்டம் நாளை தொடங்கப் படுவதை யொட்டி, டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று மதியம் 2 மணியளவில் மூடப்படும் என்று அறிவிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்துக்கான தொடக்க விழாவில், பிரதமர் தலை மையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மையை பேணுவது தொடர்பான உறுதி மொழியை ஏற்கவுள்ளனர். “வாரந்தோறும் இரண்டு மணி நேரம் அலுவலகத்தை தூய்மைப் படுத்தும் பணிக்கு செலவிடுவேன். நான் வசிக்கும் இடத்தையும், அலுவலக வளாகத்தையும் அசுத்தமாக்க மாட்டேன். பிறரையும் அசுத்தப்படுத்த விட மாட்டேன். தூய்மை இந்தியா திட்டம் பற்றி கிராமத்தினரிடையேயும், நகரத்தினரிடையேயும் பிரச்சாரம் செய்வேன்” என்று உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT