தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் யுகாதி திருநாளை தங்களது புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெலுங்கு வருடப்பிறப்பு இன்று பிறக்கிறது. இதையொட்டி ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள முக்கிய கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
குறிப்பாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று யுகாதி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மூலவருக்கு பட்டு ஆடை சார்த்தப்பட்டு, புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும். இந்த தரிசனத்தை காண்பதற்காக திருமலையில் நேற்று முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முன்னதாக யுகாதியை முன்னிட்டு நேற்று வாசனை திரவியங்களால் கோயிலை தூய்மைப்படுத்தும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. தெலுங்கு வருடப்பிறப்பு, தீபாவளி, பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம் உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.