மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா தான் தொடங்கிய புதிய கட்சிக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தும் அதற்கு எந்த பலனும் கிடைக்காததால் கடந்த ஆண்டு தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார் இரோம் சர்மிளா. இதைத் தொடர்ந்து அரசியலில் குதித்து தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அண்மையில் அவர் புதிய கட்சியை தொடங்கினார்.
மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் தொடங்கப்பட்ட அக்கட்சிக்கு 'விசில்' சின்னத்தை தேர்வு செய்துள்ளார் இரோம் சர்மிளா. மேலும் தேர்தல் ஆணையத்திடமும் இந்த சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டு கட்சி சார்பில் விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எரெண்ரோ கூறும்போது, ''உறக்கத்தில் இருக்கும் மக்களை தட்டியெழுப்பி, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கட்சியின் சின்னமாக 'விசிலை' தேர்வு செய்தோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.