நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் அத்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உட்பட 6 பேர் மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2004 முதல் 2009 வரை 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
மேற்குவங்க மாநிலம் மொய்ரா, மதுஜோர் பகுதிகளில் 2 நிலக்கரி சுரங்கங்கள் விகாஷ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி கடந்த 2012 செப்டம்பரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ். குரோவா, முன்னாள் இயக்குநர் கே.சி.காம்ரியா, விகாஷ் மெட்டல்ஸ் மேலாண்மை இயக்குநர் விகாஷ் பாட்னி, அதன் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உட்பட 6 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக எச்.சி.குப்தா மீது 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். இதுதொடர்பாக அண்மையில் அவர் நீதிமன்றத்தில் கூறியபோது, வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்த என்னிடம் பணம் இல்லை. எனது ஜாமீனை ரத்து செய்துவிடுங்கள். சிறையில் இருந்தே வழக்கை எதிர்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிமன்றத் தில் நேற்று நடந்த விசா ரணையின்போது, மத்தியப் பிரதேச சுரங்க ஒதுக்கீடு வழக்கில் மட்டும் வழக்கறிஞர் தேவையில்லை, மற்ற வழக்குகளில் வழக்கறிஞர் மூலமே வாதிட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இதனிடையே எச்.சி. குப்தா வுக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.