இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கு: ஓட்டுநர் ஷ்யாம்வர் ராயை அப்ரூவராக சேர்க்கலாம் - நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

பிடிஐ

ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராயை அப்ரூவராக ஏற்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

மும்பையின் ராய்கட் வனப் பகுதியில் 2012-ல் கொன்று புதைக் கப்பட்ட இளம்பெண் ஷீனா போராவின் உடல் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் ஷீனா போராவின் தாய் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோர் கைதாகினர். கொலை சதியில் உடந்தையாக இருந்ததாக கடந்த நவம்பர் மாதம் இந்திராணியின் தற்போதைய கணவரும், ஸ்டார் இந்தியா டிவியின் முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜியை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில் கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான ஷ்யாம்வர் ராய், இவ்வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாக தெரிவித்தார். இது தொடர்பாக சிபிஐயிடம் பதில் அளிக்க கேட்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ்.மஜாஹன் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஓட்டுநர் ஷ்யாம்வர் ராயை இவ்வழக்கில் அப்ரூவராக ஏற்றுக் கொள்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘நீதிமன்றத்தில் எங்களது பதிலை தாக்கல் செய்துள்ளோம். ஷ்யாம்வர் ராய் அப்ரூவராக மாறு வதன் மூலம் வழக்கில் புதைந்துள்ள பல உண்மைகள் வெளியாகும்’’ என்றார்.

SCROLL FOR NEXT