மகாராஷ்டிராவில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புணேவுக்கு 180 கிமீ தொலைவில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை ஒன்றில் கொலையுண்டவர்களின் உடல் உறுப்புகள் ஆங்காங்கே காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சஞ்சய் ஜாதவ் (42), இவரது மனைவி ஜெயஸ்ரீ (38), இவர்களது இளவயது மகன் சுனில் (19) ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 21-ஆம் தேதி ஜாவ்கேதே கலசா-காசர்வாடி என்ற கிராமத்தில் நள்ளிரவில் இந்தக் கொடூரக் கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.
கொலையுண்டவர்களின் உறவினர்கள் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது, இது ஒரு கவுரவக் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்தனர்.
"கொலையுண்ட ஜாதவின் பண்ணைக்கு அருகே வசித்து வந்த திருமணமான உயர் சாதிப் பெண்ணுக்கும் ஜாதவ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கடந்த ஓராண்டாக வதந்திகள் நிலவி வந்தது. இதனையடுத்து இந்தக் கொடூர பழிவாங்கல் நடந்திருக்கலாம்" ஜாதவ்வின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஜாதவ் கொத்தனார் வேலை பார்த்து வருபவர், இவர் தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார். 19 வயது மகன் சுனில் மும்பை, குர்கவானில் டிப்ளமா படிப்பு படித்து வந்தார். இவர் தீபாவளியை பெற்றோருடன் கொண்டாட கிராமத்திற்கு வந்துள்ளார்.
கொலையுண்ட சஞ்சய் ஜாதவின் அண்ணன் திலிப் ஜாதவ் கூறும்போது, “என் தம்பி குடும்பத்தினரைக் காணவில்லை என்று பண்ணைத் தொழிலாளர்கள் என்னிடன் கூறியதையடுத்து அங்கு விரைந்தேன், பார்த்தால் வீடு முழுதும் ரத்தம் உறைந்திருந்தது. வீட்டுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன” என்றார்.
அகமது நகர் மருத்துவனைகளில் கொலையுண்ட மூவரின் உடல்களையும் திலிப் ஜாதவ் உள்ளிட்டோர் தேடி அலைந்தனர். ஆனால் பயனில்லை.
“என்னுடைய சகோதரனின் பண்ணைக்கு வந்து பார்த்தோம், அப்போது கிணற்றில் பார்த்தால் என்னவென்று தோன்றியது, பார்த்தால் அதில் உடல் பாகங்கள் சில நீரில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றோம்” என்று மற்றொரு சகோதரர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்தார்.
இந்த கொடூரமான கொலையை அடுத்து கிராமத்தில் ‘மரண அமைதி’ நிலவி வருகிறது. மூவரின் இறுதிச் சடங்கையொட்டி காவல்துறையினர் கிராமம் முழுதும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
யார் கொலை செய்தார்கள், என்ன காரணம்? என்பது பற்றி இதுவரை ஒன்றும் தெரியவில்லை. கொலையாளிகளைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக பதார்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மகன், மருமகள், பேரப்பிள்ளை கொலையுண்ட செய்தியைக் கேட்டு சஞ்சய் ஜாதவ்வின் முதிய பெற்றோர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தலித் இளைஞர் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அடித்துக் கொல்லப்பட்டதற்கு அகமது நகர் காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, அகமது நகர் காவல்துறை ஊழல் கறை படிந்தது என்று ஆனந்த் ராஜ் அம்பேத்கர் என்ற தலித் சமூகத் தலைவர் ஒருவர் சாடினார்.
தலித் சமூகத்தினருக்கு எதிரான கொடூரமான வன்முறைகளின் நிலைக்களமாக அகமது நகர் இருந்து வருகிறது. ஜனவரி, 2013-ஆம் ஆண்டு துப்புரவுப் பணி செய்யும் 3 தலித்துகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சோனாய் கிராமத்தில் உள்ள செப்டிக் டாங்கில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இப்போது தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.