இந்தியா

குடிநீர் பம்புகளை சீரமைக்க மத்திய அரசு புதிய யோசனை

ஆர்.ஷபிமுன்னா

நாட்டின் கிராமப்புற மக்களுக்கு நிலத்தடி நீரே முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் ம.பி.யில் குடிநீர் கைப்பம்புகளை சீரமைக்க ஐ.வி.ஆர்.எஸ். முறையை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, குடிநீர் பம்பு பழுதான விவரத்தை மாநில அரசு அளித்துள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ் செய்தியாக அனுப்ப வேண்டும். இதையடுத்து அந்நபருக்கு வரும் தொலைபேசி அழைப்பில் புகாரை குரல் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதனை நீர்வளத் துறை கவனத்தில் கொண்டு, குடிநீர் பம்புகளை சீரமைக்கும்.

ம.பி. முழுவதும் சுமார் 5.28 லட்சம் குடிநீர் பம்புகள் உள்ளன. இவற்றில் பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மக்கள் நேரில் புகார் அளிப்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் குடிநீர் பம்புகளை சீரமைப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் மக்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை ம.பி. அரசு செயல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சக இணைச் செயலாளர் சய்தபிரதா சாஹு ‘தி இந்து’விடம் கூறும்போது “சமீபத்தில் ம.பி.யின் இந்தோர் மாவட்டத்தின் பல கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று வந்தேன். அங்கு இந்த மின்னணு தொலைபேசி முறையில் கைப்பம்புகள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதை பார்க்க முடிந்தது. இதில் முறையில் வரும் புகார்களுக்கு அதிகபட்சம் 3 நாட்களில் தீர்வு காணப்படுகிறது. இதனால் இந்த முறையை நாட்டின் மற்ற மாநிலங்களும் செயல்படுத்த யோசனை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

மின்னணு தொலைபேசி வசதியை செயல்படுத்த தேசிய தகவல் மையம் உதவும் என்றும் தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் சார்பில் இதற்கான நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறையை மேம்படுத்தும் பொருட்டு, தனியாக ஒரு ஜிஐஎஸ்(Global Identification system) வரைபடத்தை உருவாக்கி அனைத்து கைப்பம்புகளுக்கும் 10 இலக்கம் கொண்ட மின்னணு எண் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பழுதான பம்புகளை மேலும் எளிதாக அடையாளம் கண்டு சரிசெய்ய முடியும் என மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை கருதுகிறது.

SCROLL FOR NEXT