தனது கல்வித் தகுதி குறித்து, தேர்தல் கமிஷனிடம் தவறான தகவல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆஜராக சம்மன் அனுப்புவது குறித்து வரும், 15-ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2004, 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது கல்வித் தகுதி குறித்து மாறுபட்ட தகவல்களைத் தந்திருப்பதாக புகார் எழுந்தது.
தவறான தகவல் தந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 125ஏ பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தண்டனை வழங்க வேண்டும் என, அஹ்மேர் கான் என்பவர் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் 1996-ம் ஆண்டில் பிஏ படித்ததாக ஒரு மனுவிலும், பிகாம் படித்ததாக மற்றொரு மனுவிலும் இருவேறு விவரங்களை அளித்திருப்பதால், அதனை சரிபார்க்க அசல் சான்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதுதொடர்பான விவரங்களை தேடி வருவதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தேர்தல் ஆணையமும், கல்வித் தகுதியை சரிபார்க்கும் ஆவணம் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இரு தரப்பு விளக்கத்தை பெற்றுக்கொண்ட மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் ஹர்விந்தர் சிங், இவ்வழக்கில் அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆஜராக சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது குறித்து, செப்டம்பர் 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்