இந்தியா

மாட்டிறைச்சி சமைத்ததாக வெளியான புரளியால் சீல் வைக்கப்பட்ட ஜெய்ப்பூர் ஹோட்டல்

மொகமது இக்பால்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மாட்டிறைச்சி சமைக்கப்படுவதாக வெளியான புரளியை அடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் மத்திய பேருந்து நிலையத்தின் அருகே செயல்படும் ஹோட்டலில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டு, பரிமாறப்படுவதாக வெளியான புரளியை அடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பணிபுரிந்த இரண்டு பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூரில் ஹையாத் ரபானி என்னும் ஹோட்டலில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டு, பரிமாறப்படுகிறது என்று தகவல் வெளியானதை அடுத்து ராஷ்ட்ரிய மகிளா கெள ரக்‌ஷக் சேவா மண்டல் உறுப்பினர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, ஹோட்டலின் முன்பு கூடிக் கோஷமிட்டனர்.

அத்துடன் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறப்பட்ட பணியாளர் ஒருவரையும் தாக்கினர். இதைத் தொடர்ந்து அங்கே பெரும் கூட்டம் கூடியது. அப்போது பசு வதைக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் ஹோட்டல் உரிமையாளர் தங்களிடம் சரணடைய வேண்டும் என்றும் அக்கூட்டம் வலியுறுத்தியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வாசிம், காசிம் என்ற இரு பணியாளர்களை பிரிவு 151-ன் (தடுப்புக்காவல்) கீழ் கைது செய்தனர். ஹோட்டலில் இருந்த அனைவரும் வெளியேறிய பின்னர் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக இயங்கிவரும் ஹையாத் ரபானி ஹோட்டல், அதன் சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT