இந்தியா

புதுச்சேரி நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு டெல்லியில் போராட்டம்

ஆர்.ஷபிமுன்னா

புதுச்சேரியின் நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு சார்பில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

இதில், நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்களிக்கக் கோரி அம்மாநில அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவக்கல்வி பெற நாடு முழுவதிலும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துகிறது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து 'நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு' எனும் பெயரில் ஓர் அமைப்பை தொடங்க போராடி வருகின்றன. இதற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசும் ஆதரவு தெரிவித்துவருகிறது. இதன் சார்பில் இன்று மத்திய அரசை எதிர்த்து டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஒருநாள் போராட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளரான வீரமணி கூறுகையில், 'புதுச்சேரியில் உள்ள 163 பள்ளிகளில் வெறும் பத்து சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ வகை பாடங்கள் படிக்கிறார்கள். இதனால், புதுச்சேரியில் நீட் நடத்துவது சமநீதி, சமவாய்ப்பு ஆகாது. கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, எங்கள் மாநிலத்திற்கு விலக்களிக்கும் வகையிலான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றவும், அதை அமலாக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பதால் அதன் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தும் மசோதாக்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதனால், நீட் எதிர்ப்பு மசோதா இன்னும் அறிமுகப்படுத்த முடியாமல் துவக்க நிலையிலேயே உள்ளது. இதை கண்டித்தும், அனுமதி வேண்டியும் நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு டெல்லியில் மத்திய அரசிற்கு எதிராக இந்த போராட்டம் நடத்துகிறது.

SCROLL FOR NEXT