இந்தியா

வெளிநாட்டு நன்கொடைகள் உட்பட சொத்து கணக்கை தாக்கல் செய்ய தொண்டு நிறுவனங்களுக்கு உத்தரவு

பிடிஐ

வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் மற்றும் அரசின் மானியங்களை பெற்று வரும் என்ஜிஒ அமைப்புகள் இம்மாத இறுதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ன்படி அரசு பணியாளர்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களது சொத்து தகவல்கள், வருமான வரி தாக்கல் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி. அதே போல் அரசிடம் இருந்து ஒருபகுதியாக மானிய உதவி பெற்று இயங்கி வரும் தொண்டு நிறுவனங்களும் (என்ஜிஒ), வெளி நாடுகளில் இருந்து நிதி வசூலிக்கும் என்ஜிஒ அமைப்புகளும் ஜூலை 31-ம் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.10 லட்சத்துக்கு மேல் வெளிநாடுகளிடம் இருந்து நன்கொடை பெறும் என்ஜிஒக்கள் தங்களது சொத்து கணக்குகளை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஒரு அமைப்பு அல்லது அறக்கட்டளையின் இயக்குனராகவோ, மேலாள ராகவே, செயலாளராகவோ பதவி வகிக்கும் நபர், அரசிடம் இருந்து பகுதிவாரியாக பெறும் மானியங்கள், வெளிநாடுகளிடம் இருந்து பெறும் நன்கொடைகள் என ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மிகாமல் வருமானம் பெற்றால் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

வெளிநாடுகளிடம் இருந்து நன்கொடைகள் பெற்று விதிகளை மீறி செயல்பட்டு வந்த 14,222 என்ஜிஒக்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT