இந்தியா

ராகுலுக்கு அமேதி வசிப்பிடச் சான்றிதழ் கேட்டு வந்த விண்ணப்பம் நிராகரிப்பு: மனு செய்தது ராகுல் அல்ல என காங்கிரஸ் மறுப்பு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் துணைத் தலைவரும் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமேதி வசிப்பிடச் சான்றிதழ் விநியோகிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளாட்சி நிர்வாகம் நிராகரித்தது.

இந்த மனுவை ராகுல் காந்தியே தனது கையொப்பமிட்டு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த மனுவில் அவரது கையொப்பமும் இல்லை. ராஜேந்திர சிங் என்பவர்தான் இந்த மனுவை கொடுத்திருக்கிறார், இது சட்ட மீறலாகும் என மாவட்ட ஆட்சியர் ஜகத்ராஜ் திரிபாதி தெரிவித்தார்.

மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய பிற ஆவணங்களும் இதில் இல்லை. ராகுல் காந்தி இந்த சான்று கோரி விண்ணப்பிப்பதாக இருந்தால் அவரே நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இல்லை யெனில் மனுவில் கையொப்பமிட்டு, அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வேட்பாளர்கள் செலவுகளை காட்ட வங்கி்க் கணக்கு தொடங்க வேண்டி யுள்ளது. அதற்கு வசிப்பிடச் சான்று தேவைப்படுகிறது என்றார் ஆட்சியர்.

இதனிடையே இருப்பிடச்சான்று கோரி ராகுல் காந்தி மனு செய்யவில்லை என்றும் இது ஏமாற்று வேலை என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி அமேதி தொகுதியின் காங்கிரஸ் பிரதிநிதி சந்திரகாந்த் துபே கூறும்போது, ‘‘இத்தகைய சான்றிதழ் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது ராகுலின் கவனத்துக்கே வரவில்லை. அமேதியில் எத்தனையோ காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள்.அவர்களது நடவடிக்கைகளுக்கு ராகுலை பொறுப்பாக்க முடியாது’’ என்றார்.

SCROLL FOR NEXT