அதிகார வெறி காரணமாக, மக்களின் தீர்ப்புக்கு நரேந்திர மோடி அரசு மதிப்பளிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் பாஜக ஆதரவில் கலிகோ புல் தலைமையில் பொறுப்பேற்ற புதிய அரசு செல்லாததாகி விட்டது.
இதையடுத்து நபம் துகி நேற்றுமுன்தினம் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக.வுக்கும் மத்திய அரசுக்கும் பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசுக்கு அதிகார ஆசை என சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாண்டெட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் சங்கர்ராவ் சவான் சிலை மற்றும் அவரது பெயரிலான நினைவு நூலகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார்.
அப்போது சோனியா காந்தி பேசியதாவது:
தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகார வெறி காரணமாக, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்துள்ளது. இதன்மூலம் மக்களின் தீர்ப்புக்கு அவமரியாதை செய்துள்ளது.
ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் பாதுகாத்த தற்காக உச்ச நீதிமன்றம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மோடி அரசு கலைத்து, மக்களை அவமதித்துவிட்டது. சங்கர்ராவ் இன்று இருந்திருந்தால் அரசியல் சாசனத்துக்கு முரணான செயல்களைப் பார்த்து பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்.
விவசாயிகளுக்கு ஆதரவு
மன்மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் அரசாங்கத் தால் செயல்படுத்தப்பட்ட நலத்திட் டங்களை மோடி அரசு நீர்த்துப் போகச் செய்ததால் விவசாயிகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் பலவீனமடைந்துள்ளனர். மோடி அரசின் கொள்கைகளால் விவசா யிகள் மனமுடைந்து விட்டனர். நாடு வறட்சியில் சிக்கித் தவிப் பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகள் வறுமையில் வாடிக்கொண்டிருக் கின்றனர். பெரு முதலாளிகளின் கோடிக்கணக்கான கடன்களைத் தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளைப் புறக்கணித்து விட்டது. விவசாயிகளின் குரல் பலவீனமடைவதை காங்கிரஸ் அனுமதிக்காது.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.