கேரளாவின் தலைநகர் திருவனந்த புரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் அருகே நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டில் பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் குவியல் குவியலாக தங்க, வைர வைடூரிய நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து கோயிலின் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திடம் இருந்த கோயில் நிர்வாகம் உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கோயிலின் வடக்கு வாசல் பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தின் குடோனில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து நேரிட்டது. இந்த தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.