நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கையாள்வது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், மாநிலங்களவையில் கட்சியின் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா மற்றும் மக்களவையில் கட்சியின் தலைமைக் கொறடாவான ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெகுநாட்களாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவை மத்திய அரசு அண்மை யில் கோரியது. இவ்விஷயத்தில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் இதர பிரச்னைகள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் திருப்பதை முன்வைத்து, நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கட்சி கூட்டம்
நாளை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதால், சபை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தரக்கோரி, இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டியுள்ளார்.