ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில், ஒரு ஹோட்டல் அறையில் இருந்து 10 வெடிகுண்டுகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர். பாட்னா தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியை தேடும் போது இவற்றை போலீசார் மீட்டுள்ளனர். இவை தவிர 9 டெட்டனேட்டர்கள், 12 டைமர் கருவிகள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியனவற்றையும் மீட்டுள்ளனர்.
இது குறித்து ஜார்கண்ட் காவல்துறை கூடுதல் தலைவர் எஸ்.என். பிரதான், தேசிய புலனாய்வுப் படையினர் அளித்த தகவலின் அடிப்படையில் உள்ளூர் காவல்துறையினர் வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளனர். உரிய நேரத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என தெரிவித்தார்.
பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி உஜ்ஜைர் அகமத் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
உஜ்ஜைர் அகமத், பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளியான இம்தியாஸ் அன்சாரி, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த தாரிக் என்ற அய்னுல் ஆகிய 3 பேருமே ராஞ்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.