இந்தியா

கான்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மீது மோடி தாக்கு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர்: ஏழைகள் நலனுக்காக உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்ததாக, ராகுல் காந்தி பெருமைப்படுகிறார். அவருக்கு ஏழ்மை என்றால் என்ன என்பது தெரியாது. அவர் ஏழையாக பிறக்கவில்லை. அவருக்கு எப்படி ஏழைகள் வேதனை தெரியும். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மட்டுமே அவர் ஏழைகளைத் தேடிச் செல்கிறார், என்றார்.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பணக்காரர்கள் நலனுக்காகவே பாடுபடுகிறது என்றும் தாக்கினார்.

அரசுக்கு ஒரே ஒரு மதம்தான் இருக்க வேண்டும். அது தேசியம் என்பது. அதுபோல் ஒரே ஒரு புனித நூல்தான் இருக்க வேண்டும். அது சட்ட நூல் என்பது.

ஆனால், காங்கிரஸ் ஓட்டுக்காக ஆட்சி நடத்துகிறது. மதச்சார்பின்மை என்பதை கையில் எடுத்துக் கொண்டு, மக்களை பிரித்தாள்கிறது. ஓட்டுக்காக அரசியல் செய்வதை, அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சி சார்ந்த அரசியலில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT