இந்தியா

இணையத்தில் ஐஎஸ்ஐஎஸ்-ஐ தேடுவோரை பின்தொடரும் மும்பை போலீஸ்

செய்திப்பிரிவு

ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், சிரியா, ஜிகாதி போன்ற சொற்களை இணையத்தில் தேடும் அனைவருமே மும்பை போலீஸின் கண்காணிப்பின் கீழே இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், இந்த வார்த்தைகள் அனைத்தும் மும்பை போலீஸின் கண்காணிப்பு தளத்தில் 'அதிமுக்கியத்துவம்' அளிக்கப்படும் வார்த்தைகளாக உள்ளன.

மும்பை போலீஸில் சமூக ஊடக ஆய்வகம், கடந்த 2013-ல் தொடங்கப்பட்டது. இவர்களின் பணி சமூக வலைதளங்களை கண்காணித்து அதில் உலா வரும் மக்களின் மனநிலையை தெரிந்துகொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு எதிராக செயல்படுவது தான்.

சமீப காலமாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு இளைஞர்களை ஈர்த்து ஆள்சேர்க்கும் செயல் நடந்து வரும் நிலையில், அது தொடர்பான முக்கிய சொற்களை தேடும் நபர்களை கண்டறிய சிறப்பு தொழில்நுட்பத்தால் ஆன கருவிகளை மும்பை போலீஸார் பயன்படுத்துகின்றனர்.

சமீப காலமாக, ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இந்த முக்கிய சொற்களை கொண்டு தேடுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதாக கூறுகிறது மும்பை போலீஸ் சமூக ஊடக ஆய்வகம்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2014ல் சில பிரச்சினைகள் இருந்ததை அடுத்து, வரலாறு, மதம், அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்ந்த மற்றும் தொடர்புபடுத்திய கண்டிக்கத்தக்க வார்த்தைகளை கண்டறிய சிறப்பு தொழில்நுட்பத்திலான கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சமீப காலமாக இணையத்தில் உலவும் ஐஎஸ் மற்றும் அது தொடர்பான சொற்கள் எங்களது கண்காணிப்பில் உள்ளன" என்றார்.

இதனைத் தவிர சூழலுக்கு ஏற்ப தேடு சொற்களை கண்காணிப்பு தேடலில் சேர்ப்பதும் இணைப்பதுமான பணிகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தொடரப்படுகிறது.

உதாரணமாக, தற்போது நடந்த பஞ்சாப் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜெயிஷ் - முகமது இயக்கம் என்ற சொல் எங்களது கண்காணிப்பில் உள்ளது. இது தொடர்பான சொற்களை தேடும் நபர்கள் மற்றும் தொடர்புகளை சொற்பொறி காட்டிகொடுத்துவிடும்.

கண்காணிப்பின் கீழ் உள்ள சொற்களைக் கொண்டு தேடப்படும் போது வரும் தரவுகளில் ஆபத்தை விளைவிக்கும் பக்கங்கள் உடனடியாக நீக்கப்படுகின்றன.

இது போன்ற சொற்களை கொண்டு தேடியதாகவும் பயன்படுத்தியதாகவும் தினம் தினம் மும்பை போலீஸின் சைபர் பிரிவுக்கு புகார்கள் வருகின்றன. இந்த சொற்கள் அனைத்தையும் தேடும் நபர்கள், அவர்கள் பகிரும் கருத்துக்கள், எத்தனை முறை அந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டன, அவை பயன்படுத்தப்பட்ட இடங்கள் என அனைத்து தகவல்களையும் மும்பை போலீஸின் சமூக ஊடக ஆய்வக கருவிகள் காட்டிக்கொடுக்கின்றது (flagged).

அவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்ட சொற்கள் மற்றும் அது சார்ந்த பக்கங்களை நீக்கும்படி சமூக வலைதள நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சைபர் மற்றும் சமூக ஊடக ஆய்வக போலீஸின் கண்காணிப்பில் இருக்கும் சொற்களின் பட்டியலை துறையின் போலீஸார் அளிக்க மறுக்கின்றனர். ஆனால், ஐஎஸ் மற்றும் அது தொடர்பான சொற்களை தேடும் நகரங்களில் மும்பை முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்த சொற்களுடன் இடம்பெற்று நீக்கப்படும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கருத்துக்களில் பெரும்பாலானவை இனவாதத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

ஆக மொத்தம் ஐஎஸ் தொடர்பான சொற்களே தற்போது கண்காணிப்பு மையங்களால் கோடிட்டு தேடப்படுகின்றன. யூடியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் என அனைத்து பிரபல சமூக வலைதளங்களிலும் ஐஎஸ் தொடர்பான சொற்கள் உலா வந்துகொண்டே இருகின்றன. இவற்றை கண்காணித்து இளைஞர்களின் நடவடிக்கைகளை பின்தொடரும் பணி மிகவும் சவாலானதே.

ஏனென்றால், இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு இணையம் வழியாகவே அதிக அளவில் ஈர்க்கப்படுகின்றனர். கடந்த 2014ல் ஐஎஸ் இயக்கத்தில் இணைய நாட்டிலிருந்து வெளியேறிய அரீப் மஜீத் என்ற சிறுவன் மீட்டு கொண்டுவரப்பட்டார். மற்றும், அயாஸ் சுல்தான் என்ற காணாமல் போன சிறுவனும் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் இருவருமே இணையத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர்கள்.

SCROLL FOR NEXT