இந்தியா

எல்லையில் கணவரை சந்தித்தது திருப்தியாக உள்ளது: உயர் நீதிமன்றத்தில் மனைவி பதில்

பிடிஐ

காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் தேஜ் பகதூர் யாதவ். இங்கு வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமில்லாமல் இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வீடியோவுடன் தகவல் வெளியிட்டார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தேஜ் பகதூரின் மனைவி ஷர்மிளா தேவி தெரிவித்தார்.

மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஷர்மிளா, ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் சிஸ்டானி, வினோத் கோயல் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு விசாரித்து, ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவை மனைவி ஷர்மிளா சந்திக்கவும் 2 நாட்கள் அவருடன் தங்கியிருக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி எல்லை யில் பணியாற்றி வரும் தேஜ் பக தூருடன் 2 நாட்கள் தங்கியிருந்தார் ஷர்மிளா.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஷர்மிளா, தனது கணவர் நலமுடன் இருப்பதாகவும், அவரைச் சந்தித்தது தனக்கு திருப்தியாக உள்ளதாகவும் கூறினார். மேலும், மேற்கொண்டு எந்த கோரிக்கையும் தனக்கு இல்லை. இனிமேல் இந்த வழக்கை தொடர விரும்பவில்லை என்றும் ஷர்மிளா தெரிவித்தார்.

அப்போது, மத்திய அரசு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவு ரங் காந்த் கூறும்போது, ‘‘ராணுவ வீரர் தேஜ் பகதூர் தற்போது புதிய மொபைல் போன் வைத்துள்ளார். அந்த போன் மூலம் தனது குடும் பத்தினருடன் எப்போது வேண்டு மானாலும் பேசிக் கொள்ளலாம். அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை’’ என்றார்.

காந்த் மேலும் கூறும்போது, ‘‘அவர் மீது எந்த குற்ற விசாரணை யும் இல்லை. அத்துடன் அவர் வேறு முகாமுக்கு பணியிட மாற்ற மும் செய்யப்படவில்லை’’ என்று உறுதிப்படுத்தினார். அதை கேட்ட நீதிபதிகள், ‘‘விதிமுறைகளின்படி நீங்கள் (மத்திய அரசு) செயல்பட்டு கொண்டிருந்தால் பிரச்சினை தீர்வுக்கு வராது. இப்போது பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. ராணுவ வீரரின் மனைவியே தற்போது பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை இத்துடன் தள்ளுபடி செய்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT