கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் 3 பேர் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை வழங்கிய கோழிக்கோடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.நாராயண பிசாரோடி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், ஓஞ்சியத்தைச் சேர்ந்தவர் டி.பி.சந்திரசேகரன். சிறுவயது முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிய அவர் பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.
புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஓஞ்சியம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அமோக வெற்றிபெற்றார்.
இந்நிலையில் 2012 மே 4-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை ஒரு கும்பல் வழி மறித்து கொடூரமாக கொலை செய்தது. அவரது உடலில் 51 வெட்டுக் காயங்கள் இருந்தன.
இதுதொடர்பான வழக்கு கோழிக்கோடு சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி ஆர். நாராயண பிசா ரோடி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் பி.கே.குன்கனாந்தம், கே.சி.ராமச்சந்திரன், மனோஜ் ஆகியோர் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து டி.பி.சந்திரசேகரனின் மனைவி கே.கே.ரேமா கூறியபோது, தீர்ப்பு ஓரளவுக்கு திருப்தி அளிக்கிறது, இதன்மூலம் எனது கணவர் கொலையில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் தொடர்பு வெட்டவெளிச்சமாகியுள்ளது என்றார்.