பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடர்பாக அண்மையில் பல்வேறு போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.pmujjwalayojana.com என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய எரிவாயு இணைப்பு பெறுவதற்கு இந்த இணையதளத்தில் பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எரிவாயு விநியோகஸ்தர்கள் நியமனம் செய்வது தொடர்பாக www.ujwalayojana.org என்ற அமைப்பு அண்மையில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் நியமனம் செய்வதற்கு மத்திய அரசு இந்த நிறுவனத்திற்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு அரசு இலவசமாக எரிவாயு இணைப்புகள் வழங்குகிறது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.