இந்தியா

மல்லையா நாடுகடத்தல் வழக்கு: லண்டன் நீதிமன்றம் இன்று விசாரணை

வித்யா ராம்

விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கை லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்கிறது.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றவர். அவரை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 6,50,000 டாலர்கள் பிணைத் தொகையின்பேரில், நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது இந்தியாவில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை பிரிட்டன் அதிகாரிகள் துவக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

இருப்பினும், இந்த சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர் இந்தியா திரும்புவாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா - பிரிட்டன் இடையேயான நாடு கடத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதாகும் நபருக்கு சில உரிமைகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.

நாடு கடத்தல் ஒப்பந்தம்

இந்தியா- பிரிட்டன் நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பிறகு 23 ஆண்டுகளாக இதுவரை யாரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த சமீர்பாய் வினுபாய் படேல் என்பவரை இந்தியாவிடம் பிரிட்டன் ஒப்படைத்தது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் லண்டன் சென்றிருந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மல்லையாவின் பெயரைக் குறிப்பிடாமல் கடனைக் கட்டத் தவறியவர்கள் குறித்த விவகாரத்தை இந்தியா தீவிரமாகக் கையாண்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

தற்போது விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகே தெரியவரும்.

சுதந்திரமாக உலவும் மல்லையா

கடந்த சில மாதங்களாக லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சுதந்திரமாக உலவி வரும் மல்லையா, இந்திய கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி அளித்த விருந்திலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT